நாட்றம்பள்ளி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து.. பயணிகளின் நிலை என்ன?
Published : 5 hours ago
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை - பெங்களூருக்கு தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று நேற்று (டிச.01) ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பேருந்து, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து, பேருந்தில் பயணித்த 36 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் போராடி தண்ணீரைப் பீச்சு அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து, பேருந்தில் பயணம் செய்த 36 பயணிகளையும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், பின்பக்க டயரில் ஏற்பட்ட் உராய்வின் காரணமாக தீப்பற்றி எரிந்ததாகவும், இதனால் பேருந்து முழுவதும் தீ பரவி மல மலவென எரிந்ததும் தெரியவந்துள்ளது.