ட்ரோனில் பறந்த தேசியக்கொடி.. சுதந்திர தின வாழ்த்து சொன்ன ரோபோ.. வியப்பில் ஆழ்த்திய கோவை! - 78th Independence Day - 78TH INDEPENDENCE DAY
Published : Aug 15, 2024, 5:48 PM IST
கோயம்புத்தூர்: இன்று (ஆக.15) இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, நாடு முழுவதும் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் அரசூர் அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் 78வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
மேலும், தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் மாதாந்திர உதவித்தொகைத் திட்ட அறிமுகப்படுத்தியதுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த தனியார் கல்வி குழுமத்தின் செயல் இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில், இந்திய கப்பல் படை அதிகாரி கமோடர் பாலசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவர்கள் இடையே உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, முப்படையைச் சேர்ந்த தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு, மாணவர்களின் சிலம்பாட்டம் போன்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கல்லூரி வளாகம் முழுவதும் ட்ரோனில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டது. அதேபோல், மாணவர்கள் கண்டுபிடித்துள்ள ரோபோ தேசியக் கொடி ஏந்தி அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைக் கூறியது. இந்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.