பழனியில் 2ம் நாள் முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலம்.. அலைகடலென குவிந்துள்ள பக்தர்கள்! - Muthamizh Murugan Maanadu - MUTHAMIZH MURUGAN MAANADU
Published : Aug 25, 2024, 7:52 AM IST
|Updated : Aug 26, 2024, 8:21 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' நேற்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாகத் துவக்கி வைத்தார். இந்த நிலையில், 2ம் நாளாக இன்று (ஆக.25) மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வருகை தந்துள்ள ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று முதல் நாள் மாநாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த நிலையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநாடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்றும் அதே அளவு கூட்டம் அலை மோதிவருகிறது. காலை முதல் ஏராளமான பொதுமக்கள் மாநாட்டு நடைபெறும் இடமான பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி முன்பு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து இன்று ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக கருத்தரங்கம், பட்டிமன்றம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இன்று அருணகிரிநாதர் அரங்கில் நடைபெறுகிறது. மேலும், அறுபடை முருகனை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சிலைகளை முருகனின் வரலாற்று கதைகளை கூறும் வகையில், அமைந்துள்ள படங்களையும், 3டி தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள திரைப்படத்தையும், முருகனை அருகில் இருந்து காணும் வகையில் உள்ள விஆர் கண்காட்சியையும் பார்வையிட இன்று பொதுமக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இன்று வருகை தரும் அனைவருக்கும் பிரசாதம் பைகளும், அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மேலும், வருகை தரும் பக்தர்களுக்குக் காலை உணவு, மதியம் உணவு என தடபுடலாக வழங்கவும், மக்கள் ஆங்காங்கே அமர்ந்து சாப்பிடும் வகையில் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சி 30ஆம் தேதி வரை செயல்படும் எனவும், பொதுமக்களுக்கு இலவசம் எனவும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Last Updated : Aug 26, 2024, 8:21 PM IST