பட்டப்பகலில் ஆட்டோவில் வந்து ஆட்டை திருடிச் சென்ற கும்பல்.. வீடியோ காட்சி வைரல்! - MAYILADUTHURAI GOAT THEFT
Published : Feb 19, 2025, 8:31 AM IST
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அடுத்த மேல கருங்குளம் அசோகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சேது. இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும், இவர் விவசாயக் கூலி தொழிலையும் மேற்கொண்டு வருகிறார்.
இதன் காரணமாக இவர் வீட்டின் அருகே அவரது ஆடுகளை மேய விடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று (பிப்.18) வீட்டின் முன் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று திடீரென காணாமல் போகியுள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக, மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சேது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆட்டை யார் திருடியது என தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் விசாரணையின் முதற்கட்டமாக இந்த சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டோவில் வந்து லாவகமாக ஆடுகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஆட்டை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.