தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக ஒரு புகார் பெறப்பட்டு நடவடிக்கை.. - மயிலாடுதுறை ஆட்சியர் தகவல்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 5:31 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். 

அதன்படி, மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மகாபாரதி தனது மனைவி, மகனுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்கினை செலுத்தினார். 

தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில், அனைத்து முன்னேற்பாடு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 7 லட்சத்து 59 ஆயிரத்து 937 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 85 ஆயிரத்து 559 பெண் வாக்காளர்களும், 72 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 15 லட்சத்து 45 ஆயிரத்து 568 வாக்காளர்கள் உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று வாக்களிக்கும் வகையில், சக்கர நாற்காலி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குகளை பொதுமக்கள் எந்தவித அச்ச உணர்வுமின்றி வாக்களிக்கும் வகையில், காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 89 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு, நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். மேலும், ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக, கும்பகோணம் பகுதியில் ஒரு புகார் மட்டும் வந்ததைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.  

ABOUT THE AUTHOR

...view details