வாணியம்பாடியில் ஒரே நேரத்தில் 2 இடங்களில் மயான கொள்ளை! - mayana kollai festival
Published : Mar 10, 2024, 10:27 PM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை பகுதியில் 250வது ஆண்டாக, ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மகா சிவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை, வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் நடைபெற்றது. முன்னதாக பாலாற்றில் இரண்டு இடங்களில் அசுர உருவம் உருவாக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டிருந்தது.
விழாவின் ஒரு பகுதியாக அசுரனை வதம் செய்து, அசுரனின் கண்களில் உள்ள முட்டையை எடுக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதில் பொதுமக்கள் அசுரனின் கண்களில் உள்ள முட்டையை எடுக்காதவாறு, விழாக் குழுவினர் சாட்டையால் அவர்களை அச்சுறுத்துவர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கரகம் வடிவில் அசுரனை வதம் செய்ய சுற்றி வந்தபோது, அசுரனின் கண்களில் வைக்கப்பட்டிருந்த முட்டையை எடுக்க இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் கூட்டமாக ஓடி வந்ததால் அவர்களைச் சமாளிக்க, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் இளைஞர்களை கலைக்க முயன்றனர்.
அப்போது, போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திருவிழாவில் சிறிது பதற்றம் நிலவியது. இந்த மயான கொள்ளையைக் காண வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.