'மன்மத தகனம்' அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.. அப்படியென்ன விசேஷம்? - Manmadhan Thaganam - MANMADHAN THAGANAM
Published : Apr 24, 2024, 2:27 PM IST
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் சித்திரை வசந்த உற்சவம், கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது. சித்திரை வசந்த விழாவின் நிறைவு நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோயிலில் இருந்து உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் ஆகியோர் புறப்பட்டு, அய்யங்குளத்தினை சென்றடைந்தனர். பின்னர் அங்கு, அய்யங்குளத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அண்ணாமலையார் சூலத்துடன் 3 முறை குளத்தில் மூழ்கி, தீர்த்தவாரி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, ஆசையைத் தூண்டும் மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணால் எரித்த 'மன்மத தகனம்' நிகழ்வு நடைபெற்றது. ஆழ்ந்த தியானத்தில் இருந்த அண்ணாமலையார் மீது பானம் எய்த மன்மதனை, தியானம் கலைந்து எழும் அண்ணாமலையார் தீப்பிழம்பால் சுட்டு எரிப்பதே இந்நிகழ்வாகும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.