“நாங்கல்லாம் யாருனு தெரியும்ல..” கோடை வெயிலைச் சமாளிக்க காரின் மேல் தட்டி கட்டிய தாத்தா! - Summer tips for Car
Published : Apr 27, 2024, 10:30 PM IST
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள ஜமீன் சிங்கம்பட்டி அரண்மனை தெருவில் வசிப்பவர் பிரம்மநாயகம் (78). இவர் நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கியதும், வெப்பத்தைச் சமாளிக்கும், விதமாக தனக்குச் சொந்தமான காரின் மேல் கூரையின் மீது, தென்னை தட்டியைக் கொண்டு கூரை அமைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
கோடை வெயில் தாக்கம் இல்லாமல் இருக்க, தென்னை தட்டியைக் கொண்டு இயற்கை முறையில் உருவாக்கியுள்ள கூரை பொருத்திய காரில், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் சாலையில் உலா வருகிறார் பிரம்மநாயகம். அந்த வகையில், இந்த ஆண்டும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பிரம்மநாயகம் தனது காரின் மேல் தென்னந்தட்டி வைத்துக்கொண்டு சாலையில் கூலாக வலம் வருகிறார்.
இவரது இந்த செயல் மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், தன்னைப் பொறுத்தவரை இயற்கை முறையில் குளிர்ச்சி தருகிறது இந்த தட்டி, கோடை வெப்பத்தில் இருந்து தன்னை பாதுகாக்கவும், இயற்கை முறையில் குளுகுளுவெனவும் இருப்பதாக பிரம்மநாயகம் கூறுகிறார்.