கங்கைகொண்ட சோழபுரத்தில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி! - பிரகதீஸ்வரர் கோயில் மஹா சிவராத்திரி
Published : Mar 8, 2024, 4:15 PM IST
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள, மாமன்னன் ராஜேந்திரச் சோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி விமர்சையாக நடைபெறும்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று நாட்டியாஞ்சலி கோலகலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில், சென்னை, கோவை, திருச்சி, கடலூர், சிதம்பரம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
குறிப்பாக பெங்களூரு, கேரளா, கல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், நாட்டியக் கலைஞர்களின் குழு வருகை தந்துள்ளனர். அப்போது, சிறுமிகளின் நடனக்குழு ஒன்று ஆடிய நடனம், விழாவைk காண வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது.
இதனிடையே, உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், கங்கைகொண்ட சோழபுரத்தில் நேற்று முதலே கலை நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. இந்த கலை நிகழ்ச்சிகளைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்த வன்னம் உள்ளனர்.