மறக்காமல் வாக்களிப்போம்..! 100% வாக்களிப்பை வலியுறுத்தி நெல்லையில் விழிப்புணர்வு நடனம் - Lok Sabha election awareness
Published : Mar 18, 2024, 7:48 AM IST
திருநெல்வேலி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில், நெல்லை பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சாலையில் இளைஞர்கள் சிறப்பு நடன நிகழ்ச்சிகளை நடத்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தின் பின்புறம் உள்ள சாலையோர உணவகங்களில், நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, 100% வாக்களிப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பயிற்சி ஆட்சியர் கிஷன் குமார் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.