சத்தியமங்கலம் வனப்பகுதி சாலை ஓரத்தில் ஜாலியாக உறங்கிய சிறுத்தை - வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..! - ஈரோடு
Published : Feb 19, 2024, 10:28 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் நடமாடுகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலைகளில் உலா வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று (பிப்.19) அதிகாலை சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 4 பேர் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் நோக்கி கடம்பூர் மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது மல்லியம்மன் கோவில் அருகே மலைப்பாதையில் சாலையோரத்தில் இருந்த தடுப்புச் சுவர் மீது சிறுத்தை ஒன்று ஜாலியாக படுத்து இருந்ததைக் கண்டு காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சிறுத்தையை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். அப்போது சிறுத்தை கார் அருகில் நிற்பதைக் கண்டுகொள்ளாமல் தடுப்புச் சுவர் மீது படுத்துக் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்தவர்கள் அச்சத்துடன் புறப்பட்டுச் சென்றனர். கடம்பூர் மலைப்பாதையில் சிறுத்தை படுத்திருந்த வீடியோ காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.