வீட்டு நாயை வேட்டையாடிவிட்டு ஹாயாக நடந்து சென்ற சிறுத்தை.. குன்னூர் மக்கள் பீதி! - Leopard in residential area
Published : Aug 10, 2024, 5:51 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வழக்கமாகிவிட்டது. மேலும், அவ்வப்போது வன விலங்குகள் மக்களுக்கு இடையூறு அளிப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு குன்னூர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, குடியிருப்பு பகுதியில் உலா வந்துள்ளது. மேலும், அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அப்பகுதி மக்களிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஒரே வாரத்தில் இரண்டு முறை சிறுத்தை அப்பகுதிகளில் உலா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிறுத்தை குடியிருப்பு பகுதிகளில் புகுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.