கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு! - therottam at Kumbakonam
Published : Mar 23, 2024, 4:32 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகர், பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வர சுவாமி கோயிலில், பங்குனி உத்திர பெருவிழாவின் 9ஆம் நாளான இன்று (மார்ச் 23), நாகேஸ்வர சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தேரில் எழுந்தருள, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், மக்கள் தேர் மீது பலவிதமான நறுமண உதிரிப் பூக்களை தூவி, தேரில் உலா வந்த சுவாமிகளை வரவேற்று தரிசனம் செய்தனர்.
இந்த கோயிலில் சூரியனுக்கென்று தனி சன்னதி உள்ளது. சூரியனுக்கு ஒளி கொடுத்ததால், கும்பகோணம் நகருக்கு பாஸ்கர சேஷத்திரம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா, 13 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அது போலவே, இந்த ஆண்டும் இவ்விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்கியாக, கடந்த 21ஆம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 9ஆம் நாளான இன்று, ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தேரில் எழுந்தருள, நாதஸ்வர மேள தாளம் மற்றும் நந்தி வாத்தியங்கள் முழங்க, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தேரினை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து, 10ஆம் நாளான நாளை (மார்ச் 24) மகாமக குளத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, பங்குனி உத்திர தீர்த்தவாரியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.