குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா..திரளான பக்தர்கள் பங்கேற்பு! - kulasai dasara festival
Published : Oct 7, 2024, 10:10 AM IST
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.
ருத்ர தர்ம சேவா அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில், வெவ்வேறு வகையான திருக்கோலத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த ஆண்டுக்கான காளி ஊர்வலம் நேற்று (அக்.06) இரவு நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரும், ருத்ர தர்மா சேவா நிறுவனருமான வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை, அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தசரா விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான வேடமணிந்த காளிகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்று சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, சிறப்பாக காளி வேடமணிந்திருந்த பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.