நாடியம்மன் கோயில் மண்டல பூஜை.. தஞ்சை பெண்களின் அசத்தல் கோலாட்டம்! - கோலாட்டம் நடனம்
Published : Mar 11, 2024, 12:59 PM IST
தஞ்சாவூர்: கோயில்களுக்குப் புகழ்பெற்ற தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் உள்ளன. இங்கு பிரசித்திபெற்ற சக்தி தலங்களுள் ஒன்றாகப் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் உள்ளது. இங்கு தஞ்சை மாவட்டத்தில் மட்டுமின்றி திருச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
இந்த கோயிலில் 48 ஆம் நாள் மண்டல பூஜை பூர்த்தி விழா நேற்று இரவு (மார்ச் 10)வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக ஸ்ரீ நாடியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாகக் கோலாட்டம் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடப்பெற்றது.
இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மற்றும் ஒரத்தநாடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் என அனைவரும் ஒரே மாதிரியான சேலை அணிந்து சுமார் 2 மணி நேரம் 20 திரையிசைப் பாடல்களுக்குக் கோலாட்டம் ஆடி அசத்தினர்.
கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி போன்று தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இது கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்து.