பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களை வரவேற்று மனித நேயம் வளர்க்கும் பள்ளப்பட்டி இஸ்லாமியர்கள்.. - பழனி செல்லும் பக்தர்கள்
Published : Jan 24, 2024, 3:20 PM IST
கரூர்: கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் பழனி முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரை செல்லும் இந்து பக்தர்களுக்குத் தண்ணீர் பாட்டில், பிஸ்கட், ஜூஸ் ஆகியவற்றை வழங்கி பள்ளபட்டி இஸ்லாமியர்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி, அண்ணா நகரில் குதுபுதியின் தர்கா வளாகத்தில், பழனி முருகன் கோயில் தைப்பூச விழாவை ஒட்டி பாதயாத்திரை செல்லும் இந்து பக்தர்களுக்கு, பள்ளபட்டி இஸ்லாமியர்கள் சார்பில் மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டும் பள்ளப்பட்டி ஜமாத்துல் உலமாக்கள் மற்றும் வாட்ஸ் ஆப் குழு தள நண்பர்கள் சார்பாக மனித நேயத்தை வளர்க்கும் வகையில், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அரை லிட்டர் வாட்டர் பாட்டில், பார்லே ஃப்ரூட் ஜூஸ், ஹாப்பி ஹாப்பி பிஸ்கட், கால் வலிக்கான டைக்லோக்வின் பிளஸ் ஆயின்மென்ட், மினரல் வாட்டர், குளிர்ந்த மண்பானை நீர் ஆகியவை வழங்கப்பட்டன.
அது மட்டுமின்றி பக்தர்கள் தங்களது பேட்டரி செல்போன்களை சார்ஜ் செய்வதற்காக பிளக் பாயிண்ட் வசதியும், இளைப்பாற சாமியானா பந்தலும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கண்ட பழனி செல்லும் பக்தர்களும், அவர்களின் உதவிகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தனர். இது போன்ற நிகழ்வுகளால் மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தி வருவது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.