+2 தேர்வில் சாதனை புரிந்த திருநங்கை மாணவி நிவேதா... நேரில் அழைத்து பாராட்டிய கனிமொழி எம்.பி! - Transgender Student Nivetha
Published : May 15, 2024, 5:00 PM IST
சென்னை: 2023-2024ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் (12th exam result) கடந்த மே 6 ஆம் தேதி வெளியாகின. இதில் தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வில் பங்கேற்ற தமிழகத்தில் ஒரே திருநங்கை மாணவியான நிவேதா 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
"மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்பதே தன் இலக்கு" என்று அவர் கூறியிருந்தார். இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி நிவேதாவை நேரில் அழைத்து திருக்குறள் புத்தகம், பேனா ஆகியவற்றை வழங்கி பாராட்டியதுடன், அவருடைய உயர்கல்விக்கு உதவுவதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து மாணவி நிவேதாவிற்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, சென்னையில் உள்ள சி.ஐ.டி. காலனியில் உள்ள தமது இல்லத்திற்கு மாணவி நிவேதாவை நேரில் அழைத்துப் பாராட்டினார்.