புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு கோலாகலம்: காளைகள் முட்டியதில் 36 பேர் காயம்! - Jallikattu competition in Dindigul
Published : Feb 7, 2024, 9:52 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புகையிலைப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மொத்தம் 36 பேர் காயம் அடைந்தனர். மேலும், காயமடைந்தவர்களில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் மடூர் ஊராட்சிக்குட்பட்ட புகையிலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோரும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மொத்தம் 12 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 451 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 355 வீரர்கள் களம் இறங்கினர்.
இந்த போட்டியில், மாடுபிடி வீரர்கள் 8 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 17 பேர் மற்றும் பார்வையாளர்கள் 11 பேர் என மொத்தம் 36 பேர் காயம் அடைந்தனர். இதில், லேசான காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பலத்த காயமடைந்தவர்கள் 8 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.