பிஸியான சாலையில் திடீரென தீ பற்றிய கார்.. என்ன காரணம்? - car fire accident - CAR FIRE ACCIDENT
Published : May 11, 2024, 7:45 PM IST
சென்னை: சென்னை காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் மருத்துவமனையின் நான்கு சக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. தீப்பற்றி எரிந்த வாகனம் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான வாகனம் என்பதும், அது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனத்தின் முன் பக்கத்திலிருந்து அதிகப்படியான கரும்புகை எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீப்பற்றியதை சுதாரித்த ஓட்டுநர், வாகனத்தில் பயணித்த பயணிகளை வாகனத்திலிருந்து வெளியேற்றியதால் எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் தீயிலிருந்து உயிர் தப்பினர். அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கிய சில நொடிகளில் மளமளவென தீ பற்றி எரிந்து வாகனம் சேதம் அடைந்தது.
பின்னர், தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இது தொடர்பாக மயிலாப்பூர் காவல்துறையினர் வெயிலின் தாக்கத்தினால் வாகனம் தீ பற்றியதா அல்லது வாகனத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக தீ பற்றியதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.