தஞ்சையில் மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு.. மும்மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்பு! - iftar
Published : Apr 1, 2024, 1:38 PM IST
தஞ்சாவூர்: இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாகக் கருதப்படும் ரம்ஜான் பண்டிகை மாதத்தில், இஸ்லாமியர்கள் கடும் விரதம் இருந்து, தினமும் பள்ளிவாசலில் நோன்பு திறப்பது வழக்கம். இந்நிலையில், இந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வோரு ஆண்டும் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை சார்பில், மத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மேலும், அனைத்து சமுதாய பெண்கள் உள்பட கோயில் அர்ச்சகர், சர்ச் பாதிரியார், பள்ளிவாசல் இமாம் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சமத்துவமாக நோன்பு திறந்து உணவை உட்கொண்டனர். இதில் ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் தங்கள் நோன்பை முடிக்கும் அந்தி நேர உணவு விருந்தான பேரிச்சம்பழம், நோன்பு கஞ்சி, வடை, குளிர்பானம், தண்ணீர், துவையல், சாலட் ஆகியவை இடம்பெற்றிருந்தது.