கோடை வெயிலுக்கு மத்தியில் கொட்டித் தீர்த்த மழை.. நெல்லை மக்கள் மகிழ்ச்சி! - Heavy rain in nellai - HEAVY RAIN IN NELLAI
Published : May 14, 2024, 2:36 PM IST
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கரூர், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. அதிலும் கரூரில் அதிகபட்சம் 112 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சுட்டெரித்த வெயிலில் அல்லல் பட்டு வந்த மக்களுக்கு நற்செய்தியாகத் தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு வெயிலின் அளவு குறைந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்தது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி மற்றும் தென்னிந்தியப் பகுதியின் மேல் உள்ள வளிமண்டல கீழடிக்குப் பகுதிகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வழக்கம்போல், பிற்பகல் வரை வெயில் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிற்பகல் 1 மணிக்கு பிறகு திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 45 நிமிடம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும், பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, கொக்கரகுளம், நெல்லை சந்திப்பு, சமாதானபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை சுமார் 20 நிமிடங்களுக்குக் கொட்டித் தீர்த்தது.
அதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. குறிப்பாக பகல் முழுவதும் அனல் காற்று வீசிய நிலையில், திடீரென பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் திசையன்விளையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் உற்சாகமோடு ஓடி ஆடி விளையாடும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.