தேனி மேற்குதொடர்ச்சிமலை பகுதியில் காட்டுத் தீ.. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை! - வனத்துறை
Published : Mar 2, 2024, 3:20 PM IST
தேனி: மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பற்றி எரிந்த காட்டுத் தீயினால், பல்லாயிரக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை மரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக, பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் நேற்று (மார்ச் 1) காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் பற்றிய காட்டுத் தீயானது, காற்றின் வேகம் அதிகரித்ததினால், தீ மளமளவென பரவி 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் தீ பற்றி எரிந்தது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் பற்றி எரியும் காட்டுத் தீயினால் மரங்கள், அரிய வகை மூலிகைச் செடிகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. மேலும், சிறிய வகை வன உயிரினங்கள் பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. வனங்கள் மற்றும் வன உயிரினங்களைக் காக்க, காட்டுத் தீயை அணைப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், தீயை அணைப்பதற்கு போதிய உபகரணங்கள் இல்லாத காரணத்தினால், காட்டுத் தீ பற்றி எரிவதை தடுக்க முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும், பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தேனிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் காட்டுத் தீ பரவுதல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.