"துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை, அதிமுக டெபாசிட் இழப்பது உறுதி" - என்.ரங்கசாமி பேச்சு
Published : Mar 13, 2024, 10:28 AM IST
மயிலாடுதுறை: அமமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (மார்ச் 12) நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணை பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தஞ்சை என்.ரங்கசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. நமது இயக்கம் ஒரு சிறந்த கூட்டணியை தேர்ந்தெடுத்துள்ளது.
வெற்றி பெற நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான், நம் இலக்கை எட்ட முடியும். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல் வரும். அப்போது எல்லோருக்கும் பரவலாக வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு அடித்தளமாக, கிளை அளவில் கட்சியை பலப்படுத்தி, பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும். அப்படி செய்தால் நம் கட்சியை யாராலும் அசைக்க முடியாது.
எடப்பாடி தலைமையிலான அதிமுக, தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். துரோகம் என்றைக்கும் வென்றதாக சரித்திரம் இல்லை" எனக் கூறினார். முன்னதாக நடைபெற்ற கலைநிகழ்ச்சியில், திரைப்பட பாடலுக்கு எம்.ஜி.ஆர் வேடம் அணிந்து நடனம் ஆடியது, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கலைநிகழ்ச்சியை சிறுவர்கள் ஆர்வமுடன் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
மாவட்ட செயலாளர் பொன்.பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில மாணவரணி துணை செயலாளர் சுதாகர், தலைமை கழக பேச்சாளர் கோமல் கிட்டு, மாவட்ட அவை தலைவர் சாதிக் பாஷா உள்ளிட்ட பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.