மயிலார் தினம்; ராணிப்பேட்டையில் வெகு விமரிசையாக நடைபெற்ற எருது காட்டும் விழா! - செங்கனாவரம்
Published : Jan 23, 2024, 9:55 AM IST
ராணிப்பேட்டை: கலவை அருகே குட்டியம், செங்கனாவரம் ஆகிய கிராமங்களில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு எருது காட்டும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவானது தொன்றுதொட்டு பாரம்பரியமாக ஊர் நன்மைக்காகவும், பொதுமக்கள், கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்று வருகிறது.
முன்னதாக நல்லாத்தூர் அம்மனுக்கு ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்து, வண்ண மலர்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் மூலம் அலங்கரித்து, சீர்வரிசை கொண்டு வந்து படையல் செய்து, தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தனர். அதே போன்று, செங்கனாவரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பசுபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது காட்டு விழா நடைபெற்றது.
இதில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கும் வகையில், இளைஞர்கள் மாட்டின் எதிரே எருது காட்டினர். அப்போது சீறிப் பாய்ந்த காளைகளால் இளைஞர்களுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பாஸ்கர், லதா ராஜசேகர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு எருது காட்டும் விழாவை பார்த்து மகிழ்ந்தனர்.