வேலூரில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்! - விஐடி பல்கலைக்கழகம்
Published : Feb 29, 2024, 12:31 PM IST
வேலூர்: காலநிலை மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் போட்டி நேற்று (பிப்.28) நடைபெற்றது. இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் காட்பாடியில் உள்ள, வி.ஐ.டி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், காலநிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு மாரத்தான் வி.ஐ.டி பல்கலைக்கழகத்திலிருந்து துவங்கியது. இதனை, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைத் தலைவர் செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனியாக போட்டி நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று ஓடினர். மாரத்தான் போட்டியானது, வி.ஐ.டி பல்கலைக்கழகத்திலிருந்து துவங்கி, விருதம்பட்டு வரை சென்று, மீண்டும் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நிறைவுபெற்றது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.