குன்னூர் அருகே குடியிருப்புகளில் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்..! - Nilgris news in tamil
Published : Jan 24, 2024, 6:47 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் காட்டு யானைகள் இரு கூட்டங்களாகச் சுற்றித் திரிந்தன. இதில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளைக் கடந்த வாரம் குன்னூர் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை, கிளிஞ்சாடா தூத்தூர் வட்டம், மஞ்சூர் அருகே உள்ள கெத்தை பகுதியில் 5 காட்டு யானைகள் இரண்டு மாதங்களாக முகாமிட்டு இருந்தன.
இதனை அடுத்து, காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் ரேஷன் கடைகள் வீடுகள் என அனைத்தையும் உடைத்துச் சேதப்படுத்தி வந்த நிலையில், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் மற்றும் குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டு 5 காட்டு யானைகளையும் கெத்தை பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜன.24) காலை கொலக்கம்பை அருகே உள்ள அரையட்டி பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் யானைகள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும், குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று அரையட்டி பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் காட்டு யானைகளை விரட்ட தீ பந்தங்கள் காட்டி, யானைகளை அச்சுறுத்த வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.