தடாகம் அருகே ஒரே நேரத்தில் வந்த யானை மற்றும் காட்டுப்பன்றி.. பொதுமக்கள் அச்சம்! - Elephants in Coimbatore Forest Area
Published : Jun 9, 2024, 1:10 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, சோமையனூர், திருவள்ளுவர் நகர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், மருதமலை, பேரூர், தொண்டாமுத்தூர் பகுதிகளில் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லேஅவுட் பகுதியில், நேற்று இரவு நான்கு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன்படி, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.
யானைகளை விரட்டிய சிறிது நேரத்தில் காட்டுப்பன்றி ஒன்று திடீரென வந்ததால், அங்கிருந்த தெரு நாய்கள் காட்டுப்பன்றியை துரத்தியுள்ளது. பின்னர், சிறிது நேரம் கழித்து காட்டுப்பன்றி வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இதனால், இப்பகுதியில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு சிறுத்தை ஒன்று கோழியைப் பிடித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.