கடல் போல் காட்சியளிக்கும் காரையாறு அணையின் கண்கொள்ளா கழுகுப் பார்வை காட்சிகள்! - Karaiyar dam drone visual - KARAIYAR DAM DRONE VISUAL
Published : Jun 5, 2024, 8:16 PM IST
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 143 அடி கொண்ட காரையாறு அணையில் தற்போது நீர்மட்டம் 115.4 அடியாக உள்ளது. இந்த நிலையில், கார் பருவ சாகுபடிக்காக காரையார் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி, தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் காரையாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
இதனிடையே, பாபநாசம் அணையின் கழுகுப்பார்வை காட்சியை மாவட்ட நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பச்சை பசேலென நான்கு புறமும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அணை கடல் போல் காட்சியளிக்கிறது. பொதுவாக மே, ஜூன் மாதங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து விடும். ஆனால், எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சில வாரங்களுக்கு முன்பு கோடை மழை தொடர்ச்சியாக கொட்டித் தீர்த்ததால், பாபநாசம் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.