பழனி பகுதியில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை! - PALANI STRAY DOG BITING - PALANI STRAY DOG BITING
Published : Jul 23, 2024, 4:10 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தாராபுரம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே இருக்கும் பகுதியில் நேற்று காலை பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஒருவர் சென்று கொண்டிருக்கும் போது, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த தெருநாய் ஒன்று மாணவியை கை, கால் போன்ற பகுதியில் கடித்துள்ளது. பின்னர் மாணவி கூச்சலிட்டதை கேட்டு பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை அதே இடத்தில் சாலை ஓரத்தில் இளைஞர் ஒருவர் நடந்து செல்லும் போது தெருநாய் ஒன்று இளைஞரை கடித்ததுள்ளது. அப்போது அந்த தெருநாய் இளைஞரின் காலனியை கவ்விக் கொண்டு ஓடியதால், இளைஞர் தப்பியுள்ளார். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல், நேற்று மாலை பழனி உழவர்சந்தை பகுதியில் நடந்து சென்றவரை நாய் ஒன்று கடித்துள்ளது. இவ்வாறு பழனி பகுதியில் தெருநாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. எனவே, இதுகுறித்து பழனி நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.