6 சென்ட் நிலம் வழங்குக..! - ஈரோட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் தர்ணா - voter id
Published : Mar 5, 2024, 11:16 AM IST
ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 4) நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தின் போது, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல் நலச் சங்கத்தினர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ், "சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் வழித்தோன்றல்களைத் தமிழக அரசு தேசிய குடும்பமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தங்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாக வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்க வந்துள்ளோம்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக மனு அளித்தும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
எனவே, சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தைத் தேசிய குடும்பமாக அறிவித்து, அரசு விழாக்களில் முதல்மரியாதை வழங்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்காக நலவாரியம் அமைக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உதவித்தொகை, அரசு மற்றும் தனியார் மருத்துவ சேவைகள் வழங்க வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்ப வாரிசுகள் அனைவருக்கும் குறைந்தபட்சம் 6 சென்ட் நிலம் இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.