ஆதரவற்றிருந்த ஆந்திரா முதியவரை மீட்ட நெல்லை கல்லூரி மாணவர்கள்! - students rescued a helpless old man - STUDENTS RESCUED A HELPLESS OLD MAN
Published : Apr 26, 2024, 10:24 PM IST
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், நாங்குநேரி பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையிலிருந்த முதியவரை, அங்குள்ள கல்லூரி மாணவர்கள் மீட்டு உணவளித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து, பின் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டதற்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து மாணவர் சோமசேகர் கூறும்போது, "இரண்டு நாட்களாக பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையிலிருந்த முதியவரை எங்கள் கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள் பார்த்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முதியவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், காலில் காயத்துடன் இருந்தார்.
அவரிடம் பேச்சுக் கொடுத்ததில், அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, நெல்லை மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையிலும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளவர்களை மீட்டு சிகிச்சை அளித்து, பாதுகாக்கும் R-Soya என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் முதியவரை மீட்டது குறித்து தகவல் தெரிவித்தோம்.
இதனை அடுத்து அந்த முதியவரை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரும்படி கூறினார்கள். இதன் தொடர்ச்சியாக, நாங்கள் அந்த முதியவரை நாங்குநேரியில் இருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து, அங்கு மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை அளிக்கும் இடத்தில் மருத்துவரிடம் காண்பித்தோம்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்களும், முதியவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர். இதனை அடுத்து, ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மையத்திலிருந்து தன்னார்வலர்களிடம் முதியவரை ஒப்படைத்து விட்டோம்" என தெரிவித்தார்.