ராணிப்பேட்டை சோளிங்கர் மலைக்கோயிலில் ரோப்கார் வசதி தொடக்கம்! - சோளிங்கர் கோயிலில் ரோப்கார்
Published : Mar 8, 2024, 3:50 PM IST
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் செல்ல மலையடிவாரத்தில் இருந்து சுமார் 1,306 படிக்கட்டுகள் ஏறி பக்தர்கள் லட்சுமி நரசிம்மரை தரிசித்து வந்தனர்.
இதன் காரணமாக சிறியவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால், கோயில் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் அமைத்துத் தர வேண்டும் என, கடந்த 25 ஆண்டுக்கு மேலாக அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் ரூ.9.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரோப்கார் அமைக்கும் பணியானது தொடங்கியது. மேலும், 11 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இரண்டு பணிகளும் முடிவுற்று பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதனையடுத்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, ரோப்காரை கொடியசைத்து துவக்கி வைத்து, பக்தர்களோடு இணைந்து பயணித்தார். பின்னர் லட்சுமி நரசிம்மர் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வின்போது திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.