ஆவடி அடுத்த பட்டாபிராம் மின் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..! - Pattabiram EB fire accident - PATTABIRAM EB FIRE ACCIDENT
Published : May 5, 2024, 11:43 AM IST
சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய மின் அலுவலகத்தில் திடீரென மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, பட்டாபிராம் பகுதி முழுவதும் தற்போது இருளில் மூழ்கியுள்ளது.
இந்த தீ விபத்தின் காரணமாக, இந்து கல்லூரி, கக்கன் ஜி நகர், சேர்க்காடு உள்ளிட்ட பகுதியில் அமைந்துள்ள மின் இணைப்பு பகிர்மானம் வழங்கக்கூடிய டிரான்ஸ்பார்ம் முழுவதும் தற்போது தீயில் எரிந்து வருகிறது. இந்த தீயானது ட்ரான்ஸ்பார்மில் இருக்கக்கூடிய எண்ணெய் பொருட்களால் மிகப் பெரிய அளவில் தொடர்ந்து பரவியது.
இதனால், தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத்துறை வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், ஆவடி மற்றும் அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள தீயணைப்பு அலுவலகங்களுக்கு இது குறித்த தகவல் அளிக்கப்பட்டு, அங்கிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறை வீரர்கள் தொடர்ந்து இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர மிகப் பெரும் அளவில் போராடி வருகின்றனர். மேலும், திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள சேர்க்காடு, இந்து கல்லூரி, கோபாலபுரம் மற்றும் தண்டுறை போன்ற பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருளில் உள்ளனர்.