ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடப்பட்ட அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்! - Avinashi Lingeswarar Temple - AVINASHI LINGESWARAR TEMPLE
Published : Apr 21, 2024, 10:47 PM IST
திருப்பூர்: பெருங்கருணை நாயகியாக உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோயில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ளது. இந்த பழம்பெரும் கோயில், கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகும். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமான இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டத் திருவிழா நடைபெறும்.
அந்த வகையில், சித்திரைத் திருவிழா முதல் நிகழ்வாக, கோயிலில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 15ஆம் தேதி சூரிய சந்திர மண்டலக் காட்சிகளும், 16ஆம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்ன வாகனக் காட்சிகளும், 17ஆம் தேதி புஷ்பப் பல்லக்கு, கைலாச வாகனக் காட்சிகளும் நடைபெற்றது.
நேற்றைய தினம் (ஏப்.20), கருணாம்பிகை உடனமர் அவிநாசி அப்பர் திருத்தேரில் எழுந்தருளிய நிலையில், இன்று (ஏப்.21) தேரோட்டத் திருவிழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நமச்சிவாய கோஷம் முழங்க, சிவ தாளங்கள் வாசிக்க, ஆட்டம் பாட்டத்தோடு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நிறைவடைந்த பின்பு, வருகின்ற 23ஆம் தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. இன்று (ஏப்.21) நடைபெற்ற தேரோட்டத் திருவிழாவில் அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.