மாசி அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சண்டி யாகம்! - Chandi yagam to pratyangira devi
Published : Mar 11, 2024, 2:29 PM IST
அரியலூர்: மாசி அமாவாசை முன்னிட்டு பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயில் சன்னதியில் உள்ள மகா பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு மிளகாய் சண்டி யாகம் நேற்று (மார்ச் 10) விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு யாகத்தில் மிளாகாவினை போட்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் அமாவாசை நாட்களில் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது.
இந்த யாகத்தில், மூட்டை மூட்டையாக மிளகாயை யாகத்தில் போட்டு பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும், மா, பலா, வாழை, திராட்சை, உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பல்வேறு மூலிகைகள், சேலைகள் ஆகியவை யாகத்தில் இடப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, யாகத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டங்களில் இருந்த புனித நீரைக் கொண்டு பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. தீபாராதனைக்கு பிறகு அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடப்பட்டது.
இந்த யாகத்தில், அரியலூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.