மகளிர் பள்ளி அருகே உலா வரும் புலிகள்: சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல்!
Published : Mar 12, 2024, 5:16 PM IST
நீலகிரி: கூடலூர் பகுதியில் உள்ள மகளிர் பள்ளி ஒன்றின் அருகே புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் புலிகள் உலா வரும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் பகுதியானது, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதி ஒட்டி உள்ளதால், வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா வருவது வழக்கம். இந்நிலையில் கூடலூர் பாத்திமா மகளிர் பள்ளி வளாகத்தில் கடந்த மார்.05 தேதியன்று மூன்று புலிகள் இரவு வேலையில் நடமாடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
பள்ளி வளாகத்தில் புலிகள் நடமாடிய சிசிடிவி வீடியோ பதிவு, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தில் உள்ளனர். புலிகள் நடமாட்டம் காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் புலிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.