ஜீப் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்! - Salem bike accident CCTV - SALEM BIKE ACCIDENT CCTV
Published : May 18, 2024, 5:24 PM IST
|Updated : May 18, 2024, 5:34 PM IST
சேலம்: எடப்பாடி கள்ளுக்கடை அருகே நான்கு ரோடு சந்திப்பில் இருசக்கர வாகனத்தின் மீது பொலிரோ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவி தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைthதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி கிராமத்திலுள்ள தோப்புக்காட்டில் ரவி - விஜயா தம்பதி வசிக்கின்றனர். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் மூன்றாவது மகளான மதுமிதா (20), குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில் கல்லூரி விடுமுறை என்பதால், வெள்ளரிவெள்ளியில் உள்ள தனது வீட்டிலிருந்து மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சித்தூர் நோக்கி மதுமிதா சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கள்ளுக்கடை நான்கு ரோடு சந்திப்பில் சென்றபோது, எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி நோக்கி அதிவேகமாக வந்த ஜீப் (பொலிரோ பிக்கப் ஜீப்) மோதி விபத்துக்குள்ளானார்.
அப்போது, ஜீப் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி மதுமிதா, எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, தற்போது நலமுடன் உள்ளார். இதனிடையே விபத்துக்குள்ளாகிய கல்லூரி மாணவி மதுமிதா தூக்கி வீசுப்பட்ட சிசிடிவி காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.