மூதாட்டி இறங்கும் முன் பேருந்தை எடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - அரசு பேருந்து ஓட்டுனர்
Published : Feb 28, 2024, 12:54 PM IST
வேலூர்: அரசுப் பேருந்தில் இருந்து மூதாட்டி இறங்கிக் கொண்டிருந்த போதே பேருந்தை இயக்கியதால், நிலை தடுமாறிய மூதாட்டி கீழே விழுந்து காயமடைந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாநகருக்குள் பேருந்துகள் இயக்கப்படும் முக்கிய சாலைகளில் ஒன்றாக வேலூர் - ஆரணி சாலை இருந்து வருகிறது. இந்த முக்கிய சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் தினமும் பேருந்திற்காக காத்திருந்து ஏறுகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஓட்டேரி பேருந்து நிறுத்தப் பகுதியில் நின்ற அரசுப் பேருந்தில், அதிகப்படியான கல்லூரி மாணவ மாணவிகள் ஏறியுள்ளனர். அப்போது, பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர், ஓட்டேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். ஆனால், மாணவர்கள் கூட்டம் அலைமோதியதில் கூட்டத்தில் சிக்கிய மூதாட்டி, பேருந்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த போதே பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார்.
இதில் நிலைதடுமாறிய மூதாட்டி, கூட்டத்தோடு இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்துள்ளார். மறுபுறம், மாணவர்களும் பேருந்தில் ஏற முடியாமல் பின்னால் ஓடியுள்ளனர். ஆனால், இவற்றை சற்றும் பொருட்படுத்தாத அரசுப் பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கீழே விழுந்த மூதாட்டியை கல்லூரி மாணவிகள் மீட்டுள்ளனர். அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அரசுப் பேருந்து ஓட்டுநரின் இத்தகைய செயல் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.