பசு கன்றை கல்லால் தாக்கும் வீடியோ வைரல்.. போலீசார் தீவிர விசாரணை!
Published : Mar 10, 2024, 3:15 PM IST
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்துள்ள மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குன்னிப்பாளையம் பகுதியில் செல்லும் வாய்க்காலில், ஒரு பசு கன்று தவறி விழுந்தது. அதனை மர்ம நபர் ஒருவர் கல்லால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. மர்ம நபர் ஒருவர் பசு கன்றை கல்லால் தாக்கும் வீடியோ காட்சிகள், விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றிய பகுதி கால்நடை உதவி மருத்துவராக பணிபுரியும் காளிமுத்து என்பவர், மோகனூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனை அடுத்து, மோகனூர் காவல் நிலைய போலீசார், பசு கன்றை கொடூரமாக தாக்கிய நபர் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கன்றை தாக்கிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மர்ம நபர் தாக்கியதில் பலத்த காயமடைந்த கன்றுக்குட்டியை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து விசாரித்தபோது, பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது பசு கன்று கடந்த மூன்று நாட்களாக காணாமல் போனதாகவும், அதனை அவர் தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.