"பிரதமர் மோடி உங்கள் வாழ்வில் மண் அள்ளி போடமாட்டார்.. இது உத்திரவாதம்" - ராதிகா சரத்குமார் பேச்சு - Raadhika Sarathkumar - RAADHIKA SARATHKUMAR
Published : Apr 2, 2024, 9:13 AM IST
விருதுநகர்: நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளும், தங்களது வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், பிரபல திரைப்பட நடிகையுமான ராதிகா சரத்குமார் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்தவகையில் படந்தால், சுப்பிரமணியபுரம், தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியில் வந்த பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பேருந்தில் ஏறி, பட்டாசு ஆலை தொழிலாளர்களை சந்தித்து, பட்டாசு தொழிற்சாலைகளின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து போராடி வருவதாகவும், கண்டிப்பாக நரேந்திர மோடி மக்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட மாட்டார் என உறுதியளித்தார். குறிப்பாக, பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை மேம்படுத்தப்படும் என்றும் மக்களிடையே உறுதி அளித்தார்.
முன்னதாக, பிரச்சார வாகனத்தில் இருந்து மக்களிடம் பேசும்போது, "இந்த பகுதியில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை சீர்செய்வது குறித்து கட்சி தலைமை வைத்திருக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார். மேலும், இந்நிகழ்ச்சியின் போது பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.