தேனி அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு; 727 காளைகள் பங்கேற்பு! - Theni jallikattu 2024
Published : Feb 18, 2024, 1:44 PM IST
தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த அய்யம்பட்டி கிராமத்தில் உள்ள ஏழைகாத்த அம்மன், வல்லடிகாரர் சுவாமி திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜிவனா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இப்போட்டியில் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 727 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் 10 முதல் 15 சுற்றுகளாக நடத்தவும், ஒவ்வொரு சுற்றுக்கு 60 காளைகள் அவிழ்த்துவிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வெற்றி பெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தங்கக்காசு, அண்டா, மிக்ஸி உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பார்வைக்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விடுமுறை நாள் என்பதால், பொது பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் போட்டி நடக்கும் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.