லஞ்சம் கேட்ட ஆத்தூர் ஆதிதிராவிடர் நல ஆர்ஐ சஸ்பெண்ட்..வீடியோ வைரல்! - Athur Revenue Inspector suspend
Published : Sep 3, 2024, 7:11 PM IST
சேலம்: ஆத்தூரில் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பணிபுரியும் பெண் வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்கும் வீடியோ வைரலாகப் பரவியதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்துார் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வருவாய் ஆய்வாளராக கனிமொழி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் அலுவலகத்தில் ஒருவரிடம் தடையில்லா சான்று வழங்குவதற்கு லஞ்சம் கேட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், “தாசில்தாருக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும், மற்றவர்களையும் பார்க்க வேண்டும்” உள்ளிட்ட வீடியோ காட்சி பதிவாகி இருந்தது. இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தி, ஆதி திராவிடர் நல அலுவலக வருவாய் ஆய்வாளர் கனிமொழியை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் சேலம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.