அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.43 கோடி உண்டியல் காணிக்கை
Published : Mar 6, 2024, 8:26 AM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாசி மாதம் பௌர்ணமி (Masi Month Pournami 2024) நேற்று முடிந்தது. இந்நிலையில், இக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணிகள் நேற்று (மார்ச் 5) காலை முதல் தொடங்கியது. இந்த உண்டியல் எண்ணும் பணியில், அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்களையும் எண்ணும் பணி நடைபெற்றது.
மாசி மாதம் பௌர்ணமி கிரிவலத்திற்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியலில் மட்டும் காணிக்கையாக 2 கோடியே 43 லட்சத்து 63 ஆயிரத்து 544 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 165 கிராம் மற்றும் வெள்ளி 1,060 கிலோ கிராம் என ஆபரணமாகவும், வெளிநாட்டு பணம் ஆகியவையும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.