உயிருக்கு பாதுக்காப்பு இல்லை என கூட்டத்தில் இருந்து வெளியேறிய அதிமுக கவுன்சிலர்களால் பரபரப்பு! - நெகமம் காவல் நிலையம்
Published : Mar 1, 2024, 12:51 PM IST
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 11 திமுக, 6 அதிமுக கவுன்சிலர்கள் என மொத்தம் 17 கவுன்சிலர்கள் உள்ளன. இந்நிலையில், கிணத்துக்கடவு அருகே உள்ள மூலனூர் ஊராட்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் நேற்று முன் தினம் (பிப்.28) ஆய்வுக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது, திமுக கிளைச் செயலாளர் ரவிகிருஷ்ணன் அனுமதி இல்லாமல் குடிநீர் குழாய் பதித்து வந்துள்ளார். இதை அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர் நாகராஜ் கேட்டபோது ரவிகிருஷ்ணன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ரவிகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையிலும், நாகராஜ் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நெகமம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், மாவட்ட ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி தலைமையில், துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று (பிப்.29) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள், தங்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், இது குறித்து தாங்கள் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு நடக்கும் கடைசி ஒன்றிய குழு கூட்டத்தில், மக்களின் திட்ட பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றாமல், அவர்களது சொந்த பிரச்சனையின் காரணமாக கூட்டத்தை வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.