"2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு வெற்றிதான்" - எல்.கே.சுதீஷ் நம்பிக்கை - LK Sudhish on AIADMK DMDK alliance - LK SUDHISH ON AIADMK DMDK ALLIANCE
Published : Mar 29, 2024, 8:59 AM IST
தஞ்சாவூர்: தேமுதிக சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில், நன்னிலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ், தேமுதிக துணை செயலாளர் எல்கே. சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஆர்.காமராஜ், "தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை எதிரிகளும், துரோகிகளும் நிறைந்திருக்கின்றனர். அதிமுகவை அழித்து விடுவோம், ஒழித்து விடுவோம் என்று கூறினார்கள். ஆனால் தேர்தல் ஆணையம், அதிமுகவிற்கு தான் இரட்டை இலையை வழங்கியது. திமுகவின் அதிருப்தியான ஆட்சியை எதிர்த்து மக்கள் வாக்களிக்க தயாராக விட்டார்கள்" என்று கூறினார்.
அவரைத்தொடர்ந்து பேசிய தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், "இந்த கொள்கை கூட்டணி அடுத்து வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலிலும் அமைந்து அமோகமாக வெற்றி பெறுவோம். 2026ஆம் ஆண்டு தமிழகத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமிதான் முதலமைச்சர். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தமிழகத்தில் அதிகரித்துள்ள கஞ்சா புழக்கத்தை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு கேளுங்கள். முரசு சத்தம் இல்லாமல், சூரியன் வராது" என்று பேசினார்.