நெருங்கும் தேர்தல்.. அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்ட சேலம் ஆட்சியர்! - lok sabha election 2024
Published : Apr 8, 2024, 2:00 PM IST
சேலம்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதை தடுக்கும் விதமாக குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.
அதில், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மற்றும் பணங்களை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் மற்றும் வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வாகனச் சோதனையை, இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி ஆய்வு செய்தார்.
அப்போது, முறையாக சோதனை நடத்தப்படுகிறதா, அனைத்தும் வீடியோ காட்சிகள் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்த அவர், எந்த ஒரு வாகனத்தையும் சோதனை செய்யாமல் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு வந்த கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என அனைத்தையும் நிறுத்தி, அவரும் சோதனை செய்தார். இதேபோல மல்லூர், ஓமலூர், சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வாகனத் தணிக்கையினையும் ஆய்வு மேற்கொண்டார்.