அதிமுகவின் மீது விவசாயிகள் அதிருப்திக்கு இது தான் காரணம் - நடிகர் கார்த்திக் ஓபன் டாக்! - actor karthik
Published : Apr 12, 2024, 8:37 AM IST
தேனி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இன்னும் தேர்தலுக்கு 7 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் பல அரசியல் கட்சித் தலைவர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும், நடிகருமான நவரச நாயகன் கார்த்திக், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அப்பகுதிகளில் அவருக்கும் ஏராளமான பொதுமக்களும், அவரது ரசிகர்களும், அதிமுக தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நாங்கள் தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகிறோம். அதை வெளியில் சொல்வதில்லை. சேவை என்பது எந்த நேரத்திலும் செய்யலாம். விளம்பரம் இல்லாமல் நாங்கள் சேவைகளை செய்து வருகிறோம். பல்வேறு திட்டங்களை கட்சி ரீதியாக செய்திருக்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கின்றது. மீண்டும் எதிர்காலத்தில் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சர் ஆவார். எடப்பாடி பழனிசாமி அப்போது கூட்டணியில் இருந்ததால், கூட்டணி தர்மத்திற்காக விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசாமல் இருந்திருக்கலாம். அதன் ஆதங்கம் தற்போது வெளிப்படுகிறது” எனத் தெரிவித்தார்.