பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு; நெல்லையில் 44 பேர் ஆப்சென்ட்! - trb graduate teachers exam
Published : Feb 4, 2024, 2:17 PM IST
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டாயிரத்து 222 பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு இன்று (பிப்.4) நடைபெற்றது. இதில், திருநெல்வேலியில் நடைபெறும் தேர்வில் 44 பேர் தேர்வு எழுதவில்லை என்று மாவட்ட ஆட்சியகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 222 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டி எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு படி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதன் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
அதன்படி, கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கடந்த ஜனவரி 7ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மழை பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 130 மையங்களில் நடைபெற உள்ள தேர்வை 41 ஆயிரத்து 485 பேர் எழுதவுள்ளனர்.
அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் டவுன், பாளையங்கோட்டை உள்பட மொத்தம் 8 தேர்வு மையங்களில் இந்த போட்டித் தேர்வு இன்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேர்வில், இரண்டாயிரத்து 636 பேர் தேர்வு எழுதுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று நடைபெற்ற தேர்வில் 44 பேர் தேர்வு எழுதவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.