சாமி கும்பிட வந்தேனுங்க.. குன்னூர் அருகே கோயிலுக்குள் உலா வந்த கரடி! - Bear strolled into Coonoor temple - BEAR STROLLED INTO COONOOR TEMPLE
Published : Jul 2, 2024, 11:33 AM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் அதிகளவில் பகல் மற்றும் இரவு வேளைகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகரப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உலா வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று உணவு தேடி வந்த கரடி ஒன்று குன்னூர் அருகே உள்ள கிளண்டேல் எஸ்டேட் கருப்பராயன் கோயிலில் உள்ளே புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்கேற்றும் எண்ணையை சாப்பிட்டுவிட்டு கோயிலை விட்டு வெளியேறியது.இதனை அப்பகுதியில் இருந்த மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஒரு வார காலமாக வெலிங்டன் ஓட்டுபட்டறை கிளண்டேல் எஸ்டேட் பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் குடியிருப்புகளில் இரவு நேரத்தில் கரடிகள் அட்டகாசம் செய்வதாகவும், எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குன்னூர் வனத்துறையினர் இப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றைக் கரடியை விரட்டும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் இப்பகுதியில் தனியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ஒற்றை கரடி கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.