கேரளாவில் கேட்டை உடைத்து ஆவேசமாக தாக்கிய யானை.. ஒருவர் உயிரிழப்பு - வீடியோ வைரல்!
Published : Feb 10, 2024, 2:11 PM IST
|Updated : Feb 15, 2024, 7:03 AM IST
வயநாடு (கேரளா): சில காலமாகவே காட்டு விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வருவதும், குடியிருப்புகளை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, வனங்கள் நிறைந்த கேரள மாநிலத்தில் இது போன்ற நிலை அதிகமாகவே காணப்படுகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் இன்று (பிப்.10) காலையில், ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
அந்த வகையில், யானையைக் கண்ட அஜி (47) என்ற நபர், தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவற்றைத் தாண்டி, வீட்டிற்குள் குதித்துள்ளார். இதைக் கண்ட யானை, ஆவேசமாக அந்த நபரை துரத்தி, வீட்டின் கேட்டை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்து, அவரை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஜியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக மனந்தவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாக்குதல் நடத்திய இந்த யானை, கர்நாடகாவைச் சேர்ந்த ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானை என்பது குறிப்பிடத்தக்கது. ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததற்கு, வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யானை வீட்டிற்குள் புகுந்து ஆவேசமாக தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.